இன்று மகாளய அமாவாசை
இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய அளவில் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம், தை மாதம், புரட்டாசி அமாவாசை காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
காசிக்கு நிகராக கருதப்படும் ராமேஸ்வரத்தில், இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனித நீராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று அதிகாலை, ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டதாகவும், இந்த அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததாகவும் அறியப்படுகிறது. மேலும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் காட்சிகளும் காணப்பட்டன. இன்று ராமேஸ்வரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.