சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்பு அதிரடி.
சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் முறைகேடு புகார்களுக்கு ஆளான 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெறுதல், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கியதில் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து முறைகேடு செய்ததாக டாக்டர் தேவிகலா என்பவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, புதிய கட்டிடம் ஒன்றின் உரிமையாளரிடம் 2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் என்பவர் ஜூலை 10-ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சியில் அடுத்தடுத்து லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருவது மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக மாநகராட்சி எடுத்து வரும் இந்த கடுமையான நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.