அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை

21.03.2023 22:15:51

அவுஸ்திரேலியாவில் ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கம் மீதான நம்பிக்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் குறைவடைந்து வருவதாக அந்த நாட்டின் சுயாதீன செனட் சபை உறுப்பினர் லிடியா தோர்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களில் இருந்து தம்மை காப்பற்றிக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்ற அகதிகளை மேற்கோள்காட்டி, நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இனப்படுகொலை

அங்கு மேலும் உரையாற்றிய அவர், இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களின் கொடூரத்தை அனுபவித்த சில இளம் தமிழ் அகதிகளை (தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு)சந்திக்கும் வாய்ப்பு அண்மையில்(மார்ச் 6 ஆம் திகதி) எனக்கு கிடைத்தது.

இனப்படுகொலை தொடர்பில் தமிழ் அகதி ஒருவரால் எழுதப்பட்ட அறிக்கையை இந்த இடத்தில் நான் வாசிக்க விரும்புகிறேன்.

“என்னுடைய தந்தை கொல்லப்படும் போது எனக்கு 10 வயது. அவர் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிய கடற்றொழிலாளி.

கடந்த 2009 ஆம் ஆண்டில் மோதல் தவிர்ப்பு வலயமாக காணப்பட்ட தனது தாய்நிலமான முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.

ஈழத்தமிழர்கள் எனும் ஒரே காரணத்தால் எமது பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அனுபவித்த ஒரு சாட்சி நான். நான் இருந்த இடத்தில் பல குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கண் முன் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான ஒரு இடத்தை தேடி, நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.

ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை

நான் தற்காலிக நுழைவிசைவில் இருக்கும் வேளை, நிரந்தர நுழைவிசைவு குறித்து கேள்விப்பட்டேன். இதற்காக எனது நண்பர்களும் காத்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களது மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சிலர் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எமது தாய்நாட்டிலிருந்து நாம் விரட்டியடிக்கப்பட்டோம். எமக்கு நிரந்தர வதிவிடம் வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாத காலமாகிறது. அவர்களது வருகை எமக்கு எதிர்பார்ப்பை அளித்திருந்தாலும் தற்போது அந்த எதிர்பார்ப்பு குறைவடைய ஆரம்பித்துள்ளது.

தற்காலிக நுழைவு விசாவுடையோர், திருமணம் செய்ய முடியாது, நிரந்தர தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாது மற்றும் தமக்கான நிரந்தர வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக மீண்டும் எமது தாய் நாட்டுக்கு நாம் அனுப்பப்படுவோம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. நாம் எமது குடும்பத்தாருடன் அவுஸ்திரேலியாவில் வாழ ஆசைப்படுகிறோம்.

நாம் இங்கு சமாதானத்தை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்கள். இது என்னுடைய மாத்திரம் அல்ல. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை”.