உலகின் பெரும் பணக்காரர் 7 நிமிடங்களில் ஏழையானார்
பிரிட்டனில், உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஒருவர், ஏழு நிமிடங்களில், அந்த தகுதியை இழந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துஉள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசிக்கும் மேக்ஸ் போஷ் என்ற இளைஞர், 'யு டியூப்' சேனலில் சுவாரஸ்யமான செய்திகளை தருவதில் வல்லவர். இவருக்கு, யு டியூப் சேனலில், 6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மேக்ஸ் போஷ் திடீரென உலக பணக்காரர்கள் வரிசையில், முதலிடத்தை பிடித்தார். இது குறித்து, மேக்ஸ் போஷ் யு டியூபில் கூறியதாவது:பிரிட்டனில் தொழில் துவங்குவது சுலபம். எந்த நிறுவனத்தின் பெயரானாலும், இறுதி யில் 'லிமிடெட்' என இருக்க வேண்டும். அதன்படி, நான் 'அன்லிமிடெட் மணி லிமிடெட்' என்ற நிறுவனத்தை பதிவு செய்தேன். நிறுவனம் செய்யும் தொழில் குறித்து, எனக்கு என்னவென்றே தெரியாத உணவுப் பொருளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தேன்.
லண்டனில் ஒரு கடையை திறந்தேன். நிறுவனத்தின் 1,000 கோடி பங்குகளை தலா, 5,000 ரூபாய் வீதம் விற்று, 50 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டேன். இதன் வாயிலாக, உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கை விட இரு மடங்கு சொத்துடன், உலகின் 'நம்பர் - 1' பணக்காரராக முடிவு செய்தேன்.ஆனால், என் நிறுவனத்தில் ஒருவரும் முதலீடு செய்ய வரவில்லை.
ஒரு பெண்மணி மட்டும், ஒரு பங்கை வாங்கினார். அதை மகிழ்ச்சியுடன் யு டியூபில் தெரிவித்தேன். உடனே அரசு அதிகாரிகள், நான் பொய் தகவல் கொடுத்து நிறுவனத்தை துவக்கியதாக கூறி, மூட உத்தரவிட்டனர். 'ஒரு பங்கை மட்டுமே விற்பனை செய்துள்ள நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 50 லட்சம் கோடி ரூபாய் என விண்ணப்பத்தில் தெரிவித்தது சட்ட விரோதம்' என்றனர்.
உடனே, நான் நிறுவனத்தை மூடி விட்டேன். எல்லாம் ஏழு நிமிடங்களில் முடிந்து விட்டது. அந்த தருணத்தில், உலகின் நம்பர் - 1 பணக்காரராக நான் இருந்தேன் என்பதே எனக்கு பெருமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, மேக்ஸ் போஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.