கடன் மறுசீரமைப்புக்கு இலங்கை புதிய திட்டம்

25.05.2022 00:10:00

இலங்கையில் கடனை மறுசீரமைப்பதற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்களில் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், துறைசார் நிறுவனங்களிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது அது தொடர்பாக துறைசார் நிறுவனங்களிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

இதுதொடர்பில் உருவாக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய விசேட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய clifford chance, lazard என்கின்ற நிறுவனங்கள் கடன் மறுசீரமைப்புக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களாக தெரிவுசெய்யப்பட்டன.

இதற்கமைய முதலாவது மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள், நான்காவது மூன்று மாதங்கள் என வருடத்தின் நான்கு பிரிவுகளாக செலுத்துவதற்கான கடன் 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக செலுத்தவேண்டிய தொகை 5.6 மில்லியன்களாகும். இதுதொடர்பான விபரம் அமைச்சரவைக்கு கிடைத்துள்ளது. அதனை அரச தலைவருக்கு அனுப்பிவைக்கவுள்ளோம்” என்றார்.