என்னிடம் இருப்பது உண்மை உழைப்பு நேர்மை
நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “கூத்தாடி கூத்தாடி என்று சொன்னால், விஜய் கூத்தாடி தான். மக்களோடும் மண்ணோடும் கலந்த ஒன்று கூத்து. கூத்தாடி என்ற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. நம்ம தமிழ்நாட்டு வாத்தியார் எம்ஜிஆர், ஆந்திராவில் அவங்க ஊர் வாத்தியார் என்.டி.ஆர். ஆகியோர் கட்சி ஆரம்பித்த போது கூத்தாடி கூத்தாடி என அவர்களை அப்படிக் கூப்பிடும்போது நம்மளை கூப்பிடாமலா இருப்பார்கள். சினிமா என்றால் பாட்டு, ஆட்டம், பொழுதுபோக்கு தானா?. தமிழகத்தின் கலை, இலக்கியம், வாழ்வியல் பண்பாடு தான் சினிமா. பொழுதுபோக்குக்கான காரணத்தையும் தாண்டி சமூக அரசியல் புரட்சியை உதவிய பவர்ஃபுல் ஆயுதம் தான் சினிமா. |
திராவிட இயக்கமெல்லாம் பட்டி தொட்டி எங்கும் சினிமாவை வைத்துத் தான் வளர்ந்தது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் கூத்தாடி என்றால் கேவலமான ஒரு பெயரா. கெட்ட வார்த்தையா?. கூத்து சாதாரண வார்த்தை இல்லை. கூத்து என்பது சத்தியத்தைப் பேசும், சாத்தியத்தைப் பேசும், கொள்கையைப் பேசும், கோட்பாட்டைப் பேசும், கோபத்தைப் பேசும், அரசியலைப் பேசும், அறிவியலைப் பேசும், நல்லதைப் பேசும், உள்ளதைப் பேசும், உண்மையைப் பேசும், உணர்வோடு பேசும். இதையெல்லாம் கொஞ்சம் சோர்வு இல்லாமல் கொண்டாட்டமாகப் பேசும் கூத்து ஒரு கொண்டாட்டம் என்றால் கூத்தாடி கொண்டாட்டத்தின் குறியீடு. கூத்து கொண்டாட்டம் என்றால் கூத்தாடி அந்த கொண்டாட்டத்தின் குறியீடு. கூத்தாடியின் உள்ளத்தில் உள்ள சோகத்தையும், கோபத்தையும் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. அவனுக்குள் உள்ள கோபம் கொப்பளித்தால் யாராலும் அவரை கண்ட்ரோல் செய்ய முடியாது. அவன் நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை நெருப்பு மாதிரி தான் இருப்பான். அதனால்தான் குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கைதட்டுவார்கள். கண்கள் கலங்கும். காரணம் வேறு ஒன்றும் இல்லை அவன் நம்மளை மாதிரி இருக்கிறானே நமக்கான ஆளாக இருக்கிறானே நாம் நினைத்ததைப் பேசுகிறானே நமக்காகப் பேசுகிறானே அந்த உணர்வு தான் கூத்தாடியை மக்களிடம் கனெக்ட் செய்கிறது தான் அதற்கான காரணம். அன்றைக்குக் கூத்து இன்றைக்கு சினிமா. அவ்வளவுதான் ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்த போது முகம் சரியில்லை, ஆளு சரியில்லை, அழகு சரியில்லை, முடி சரியில்லை, உடை சரியில்லை அசிங்கப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் கூட கலங்காமல் ஒவ்வொரு வாய்ப்புகளும் ஒவ்வொரு சூழலுக்காகவும் காத்திருந்து காத்திருந்து சுற்றி சுற்றி சுழன்று சுழன்று உழைத்து உழைத்து மேல வந்தவன். மேல வந்தவன் தான் இந்த கூத்தாடி. அப்போதும் கூட உழைப்பு மட்டும் தான் என்னுடையது. அதனை முழுதாக கிடைத்தது இந்த ரசிகர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மனிதருக்கும் ஒரு மாற்றம் வரும். சாதாரண ஒரு இளைஞனாக இருந்த விஜய் நடிகனாக மாறினான். அந்த நடிகன் வெற்றி பெற்று வெற்றி பெற்று, மனிதனாக, பொறுப்புள்ள மனிதனாக மாறினார். அந்த பொறுப்புள்ள மனிதன் பொறுப்புள்ள தலைவனாக இல்லை, பொறுப்புள்ள தொண்டனாக மாறினான். இன்றைக்கு அந்த பொறுப்புள்ள தொண்டன் தான் நாளைக்கு நான் சொல்லத் தேவையில்லை. அப்படி என்னை மாற்றியது மக்கள் தான். என்னிடம் இருப்பது உண்மை உழைப்பு நேர்மை அவ்வளவுதான்” எனப் பேசினார். |