இம்ரான் கான் மேல் முறையீடு

22.10.2022 15:44:59

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பணக்கார அரபு நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள ஆட்சியாளர்களிடம் இருந்து விலை உயர்ந்த கிராப் கைக்கடிகாரம், பேனா, மோதிரம், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை பெற்றார். அவை பாகிஸ்தானின் கஜானாவில் (டோஷாகானா) வைக்கப்பட்டன. பின்னர் அவற்றை அவர் தள்ளுபடி விலையில் (ரூ.2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம்) திரும்பப்பெற்றார். ஆனால் அவற்றை கொழுத்த லாபம் வைத்து ரூ.5 கோடியே 80 லட்சத்துக்கு விற்றார். ஆனால் இதை இம்ரான்கான் வருமான வரி கணக்கு தாக்கலில் மறைத்து ஊழல் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளுங்கூட்டணி எம்.பிக்கள், நாடாளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பிடம் புகார் செய்தனர். உடனே அவர் அதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 62 மற்றும் 63-ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக அந்த நாட்டின் தேர்தல் கமிஷனின் பார்வைக்கு அனுப்பினார். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்புசெய்து பதவியைப்பறித்தது. மேலும் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் நின்று எம்.பி. பதவி வகிக்கவும் தடை விதித்தது. அதுமட்டுமின்றி ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக இம்ரான் கான் மேல் முறையீடு செய்துள்ளார்.