ரணிலின் கைது வரலாற்றினுடைய முதல் அத்தியாயம்.

24.08.2025 10:00:00

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஜனாதிபதியும் கைது செய்யப்படலாம்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையினுடைய சட்டப்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது வரலாற்றினுடைய முதல் அத்தியாயமாக பேசப்படுகிறது.

ஜனாதிபதியும் கைது செய்யப்படலாம் என்ற திருத்தத்தை கொண்டு வந்தவரும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான்.

யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்கு இலங்கையினுடைய சட்டம் தயாராக இருக்கின்றது. என்பதை நிருபித்திருக்கின்றது.

ஆனாலும் இந்த கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவர கூடும் என சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார். 

 

சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (22.08.2025) குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார். 

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் ரணில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறான பின்னணியில், அவரின் உடல்நிலை, உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.