
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை நிறுத்த வேண்டும்!
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்கும் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேர்தல்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். |
ஆகவே, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அரசாங்கம் நீக்கும் வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கால எல்லை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுக்கு வரவுள்ளநிலையில் அதனை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அப்பின்னணியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றது. தொழில்துறையும் மக்களும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் வரிச்சலுகைகள் அவசியமானவை என்பது பொதுப்படைய விடயமாகும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இலங்கையில் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டமானது தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று தான் ஜே.வி.பியையும் இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பயன்பாட்டில் பாதிப்புக்குள்ளான அனுபவம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கும் நன்றாகவே உள்ளது. அவ்வாறான நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், அவ்விதமான நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முழுமையாக மாறியிருக்கின்றார்கள். தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை பல்வேறு விதமான காரணங்களுக்காக பயன்படுத்தும் நிலைமைகளே உள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த காலத்தில் இருந்த அத்தனை அரசுகளும் அதனை நீக்குவதாகவே கூறிவிட்டு இழுத்தடிப்புக்களைச் செய்து வந்திருந்தார்கள். அப்பின்னணியில் ஒரு கட்டத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தபோது பிரஸ்ஷல்சுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக உறுதியளித்துவிட்டு வந்திருந்தார். அதன்பின்னர் அவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு விளைந்தார். எனினும் அது கைகூடவில்லை. அதன்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுவும் நிறைவேறவில்லை. குறித்த இரண்டு சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்தது. அச்சட்டமூலங்கள் பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோது அதில் பங்கேற்க முடியாது என்று ஜே.வி.பி.அறிவித்ததோடு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவது தான் தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டது. தமது ஆட்சியில் நீக்கப்படும் என்றும் கூறியது. எனினும், நாங்கள் நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டையையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது ஜே.வி.பியும் அதனை ஆதரித்துள்ளது. தற்போது, அந்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதில் சட்டத்தினை இயற்றுவதற்கு தயாராகின்றது. அநுர அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்துடனான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பை குழுவானது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடடினாக நீக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கோர வேண்டும் என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்களில் ஒன்றான பி.ஆர்.எல்.எம்.இன் தலைவரும் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமானது, தற்போது வரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்தினை நீக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். ஆனால், ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எமக்கும் வழங்குவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்பினருக்கும் வழங்குவார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது கிடையாது. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் மட்டுமல்ல, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த நிலைமையே தற்போது வரையில்நீடிக்கின்றது. தற்போது ஆட்சிக்கு வந்தவர்களும் இந்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருந்தாலும் சில விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் இறைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாகவே உள்ளது. ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி தான் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஏமாற்றும் தந்திரமாகும். ஆகவே தற்போதைய அரசாங்கமும் ஏமாற்றுச் செயற்பாட்டையே செய்கிறது,போலி வாக்குறுதியையே வழங்கியுள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரையில் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை நீக்க வேண்டும். அதன் மூலமாகவே அரசாங்கத்தினை வழிக்குக் கொண்டுவர முடியும் என்றார். |