
ஈரானின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்!
ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகளை சேதப்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (13) அதிகாலை ஒரு பதிவில் குறிப்பிட்டார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரானின் பல அணு மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.
ஈரானிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான நூர் நியூஸ், ஈரானின் தலைநகரிலும் அதைச் சுற்றியும் பல “பலத்த வெடிப்புகள்” பதிவாகியுள்ளதாகக் கூறியது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு முழு எச்சரிக்கையுடன் உள்ளது என்றும், இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அது மேலும் கூறியது.
ஈரானிய ஊடகங்களும் சாட்சிகளும் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமான நடான்ஸில் வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவித்தனர்.
அதே நேரத்தில் இஸ்ரேல் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்பார்த்து அவசரகால நிலையை அறிவித்தது.
தாக்குதலில் ஈரானிய அரசு தொலைக்காட்சி, புரட்சிகர காவல்படையின் உயரடுக்குத் தலைவரான ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாகவும், தெஹ்ரானில் உள்ள அந்த பிரிவின் தலைமையகம் தாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அது கூறியது.
தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, பதில் தாக்குதலை இஸ்ரேல் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இதனிடையே, இந்த நடவடிக்கையில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அமெரிக்கா கூறியது.
இது ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமான மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரிக்கும் அபாயத்தை எழுப்புகிறது.
விரிவான வான்வழித் தாக்குதல்களுடன், இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் ஈரானுக்குள் தொடர்ச்சியான இரகசிய நாசவேலை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியது என்று மூத்த இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.