தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாகன விளம்பரம்.

24.05.2026 13:11:59

தமிழக கல்வித்துறையில் எப்போதும் இல்லாத ஒரு புதிய மறுமலர்ச்சியாக, அரசு பள்ளிகள் தங்களின் தரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக எடுத்து வரும் முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. 

குறிப்பாக, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்காக தனியார் பள்ளிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் அதிநவீன வாகன விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் விளம்பரம் செய்ய தொடங்கியுள்ள காட்சி பார்ப்பதற்கே மிகவும் கண் கொள்ளா காட்சியாகவும், பெருமையாகவும் அமைந்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. தவெக அரசின் தீர்க்கமான கொள்கைப்படி, தமிழகத்தின் அடையாளமான இருமொழி கொள்கையே இக்கல்வியாண்டிலும் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு பின்பற்றப்படுகிறது. 

ஏழை, எளிய சாமானிய மக்களின் குழந்தைகளும் தரமான ஆங்கில வழி கல்வியை எவ்வித கட்டணமும் இன்றிப் பெற முடியும் என்பதை இத்தகைய விளம்பரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்தர ஆய்வகங்கள் மற்றும் இலவச கல்வி உபகரணங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மேம்படுத்தி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்து வரும் இந்த தனித்துவமான மற்றும் புதுமையான முயற்சி, தமிழகத்தின் அரசு பள்ளிகளின் மீதான மதிப்பை மக்கள் மத்தியில் பல மடங்கு உயர்த்தியுள்ளது.