ஏடிபி கிண்ண டென்னிஸ் தொடரில் நவோக் ஜொக்கோவிச் பங்கேற்பதில் ஐயம்!

08.12.2021 05:36:36

சிட்னியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏடிபி கிண்ண டென்னிஸ் தொடரில் சேர்பியாவின் முன்னணி வீரர் நவோக் ஜொக்கோவிச் விளையாடுவதில் ஐயம் நிலவுகிறது.

எனினும் அவர் இந்த தொடருக்கான சேர்பிய குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையில் சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதில் விளையாடுவதற்கு வீரர்கள் அனைவரும், கொவிட் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் ஜொக்கோவிச் தடுப்பூசியைப் பெற்றுள்ளரா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

அவர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இந்த தொடரில் விளையாட வேண்டுமாக இருந்தால், அவர் சார்பில் நியுசவுத் வேல்ஸ் அரசாங்கம் விசேட விதிவிலக்கு கோரலை பெற வேண்டும் என்பதோடு, அவர் 14 நாட்கள் அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்படவும் வேண்டும்.

அதேநேரம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகின்ற முதலாவது க்ராண்ட்ஸ்லாம் தொடரின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாவிட்டால், அதிலும் ஜொக்கோவிச் விளையாடமாட்டார் என்று அவரது தந்தை கடந்த தினம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.