பிரபல நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

02.03.2023 16:35:48

47 வயதான நடிகை சுஷ்மிதா சென், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் ஸ்டெண்ட் பொருத்தி அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

90 களில் பல இந்திய இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் பிரபல பாலிவுட் நடிகையாகவும் வலம்வந்தவர் நடிகை சுஷ்மிதா சென். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். தொடர்ந்து சினிமா துறையில் வரவேற்கப்பட்ட நடிகையாக வலம்வந்த இவர் ‘ரட்சகன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.

 

தற்போது 47 வயதான நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது அது உங்களுடன் நிற்கும். (எனது தந்தை சென்சுபிரின் அற்புதமான வார்த்தைகள்) என்று குறிப்பிட்டு தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. மிக முக்கியமாக ‘எனக்கு பெரிய இதயம் இருக்கிறது’ என்று இருதயநோய் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் உதவிய ஏராளமானோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவருகின்றனர்.