கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள்

22.01.2022 11:25:11

த்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.