ஈரானுடனான பதற்றங்கள் அதிகரிப்பு.

12.06.2025 07:44:28

பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு என்ன காரணம் என்பதை அதிகாரிகள் உறுதியாகக் கூறவில்லை.

எனினும், அண்மைய நாட்களில் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்க ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஈரானிடம் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அவர் புதன்கிழமை (11) கூறினார்.

அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதால், அமெரிக்காவின் அறிவிப்பு உண்மையான கவலைக்கு மாறாக எந்த அளவுக்கு சமிக்ஞை செய்வது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டால், தனது நாடு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே கூறினார்.

 

இந்த நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் தாமாக முன்வந்து வெளியேறுவதற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஒப்புதல் அளித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பொதுமக்களின் எரிசக்தி உற்பத்திக்கானது என்றும் அது அணுகுண்டை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறது.

இதனிடையே, புதன்கிழமை, ரோயல் கடற்படையின் ஒரு பகுதியான இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் கப்பல் போக்குவரத்தை பாதிக்கக்கூடும் என்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

 

இது இவ்வாறிருக்க அமெரிக்கா வெளியேற்றம் குறித்த செய்தி வெளியானபோது, ​​பிராந்திய பாதுகாப்பின்மை விநியோக சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பில், எண்ணெய் விலை ஆரம்பத்தில் 4% க்கும் அதிகமாக அதிகரித்தது.

பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, சுமார் 2,500 அமெரிக்க படையினர் ஈராக்கில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.