நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்று தொடரை வென்றது !

06.12.2021 16:58:58

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 372 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியானது, இந்தியக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில், இந்திய அணி பதிவு செய்த மிகப்பெரிய ஓட்ட வெற்றியாகும்.

மும்பை மைதானத்தில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 150 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என பெருமையை அவர் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 62 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் ஜேமிஸன் 17 ஓட்டங்களையும் டொம் லதம் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந் யாதவ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 263 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய இந்தியக் கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து அணிக்கு 540 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 62 ஓட்டங்களையும் புஜாரா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தலா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 540 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி, 372 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேரில் மிட்செல் 60 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் மற்றும் ஜெயந் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மாயங் அகர்வால் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல அஸ்வின் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.