தங்கம் வெல்லும் முனைப்பில் பி.வி.சிந்து..!

08.08.2022 10:57:46

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லி களம் காணுகின்றனர்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றுடன் இந்த விளையாட்டு திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லி ஆகியோர் களம் காணுகின்றனர். கனடாவின் மிச்செல் லி 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். முன்னதாக, கடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறி வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் உறுதி செய்யப்படும்.