ஸ்பெயினில் அவசரநிலை பிரகடனம்.

24.07.2026 13:34:18

பயங்கர காட்டுத்தீ காரணமாக ஸ்பெயினில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் அதனை சுற்றியுள்ள அவிலா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக ஸ்பெயின் அரசாங்கம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

காட்டுத் தீ பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இருந்து இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் ஒரே நேரத்தில் காட்டுத்தீ பரவியதும், மோசமான வானிலையும் பரவும் காட்டுத் தீயின் தீவிரத்தன்மைக்கு முக்கிய காரணம் என்று உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஸ்பெயின் மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பருவமழை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறாக பெய்த அதிகமான மழைப்பொழிவு காரணமாக வேகமாக வளர்ந்த தாவரங்கள், கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் காய்ந்து கருகியதால் இது காட்டுத்தீ வேகமாக பரவ எரி பொருளாக மாறியுள்ளது.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக 270 க்கும் மேற்பட்ட அவசர கால நிபுணர்கள் மற்றும் 40 தரைவழித் படைகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவ இராணுவ அவசரகால படையினரும் பாதிக்கப்பட்ட பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு காட்டுத்தீ சம்பவத்தில் இதுவரை 100,000 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. மேலும் 13 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.