சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும்

15.06.2024 09:39:36

எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) பிற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இக்கட்டான பொருளாதாரச் சூழலிலும் அரசாங்கம் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வியே நாட்டின் பலம் என்றும் வலியுறுத்தினார்.

கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்குச் இன்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாணவிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தார்.

புதிய வகுப்பறைகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கல்லூரி மாணவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தப் புதிய கட்டடத்தின் முதற்கட்டப் பணிக்காக ரூ.450 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி அரசாங்கத்தினாலும் பெற்றோராலும் வழங்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளை முடித்துத் தருமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு கட்டங்களாக கட்டட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியதுடன், கோஷங்களை எழுப்பி காலத்தைக் கடத்தும் காலம் இதுவல்ல என்றும் வலியுறுத்தினார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய பாதையில் செல்ல வேண்டும் எனவும், அதற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் விரைவான அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாதம்பை பொருளாதார வலயத்தை மீள ஆரம்பித்து பிரதேசத்தை சுற்றுலா, பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் இங்குக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,

கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு நவீன கல்வியை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. கடந்த கால கல்வி முறைகள் பற்றி தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தைப் பார்த்து, ​​தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். நமது நாட்டின் பலம் கல்விதான். நம் நாட்டில் எப்பொழுதும் சிறந்த கல்வி முறை உள்ளது. கடந்த காலங்களில் கல்விக்காக இயன்றளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்கினோம்.

நான் வங்குரோத்தடைந்த நாட்டையே பொறுப்பேற்றேன். அப்போது அரசியல் கட்சிகள் பிளவுபட்டிருந்தன. எனவே, எங்களில் ஒரு குழு ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம். இப்போது நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது நாம் படிப்படியாக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேறி வருகிறோம்.

சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, அடுத்த தவணைக்கான பணத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம். அத்துடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கிய நாடுகளின் குழு அடுத்த வாரம் கூடவுள்ளது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நாம் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட முடியும். இரண்டு வருடங்கள் முடிவதற்குள் இந்த நிலையை அடைந்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.

அதனால் நாம் திருப்தியடைய முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை 5% ஆகக் குறைக்க வேண்டும், வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். கல்வியில் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கோஷங்களை எழுப்பி காலம் கடத்த இப்போது நேரமில்லை. அந்த யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது.

மாதம்பை பொருளாதார வலயத்தை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அத்துடன் பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயம் மற்றும் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரணவிலவில் சுற்றுலா வலயமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது சுற்றுலாப் பொருளாதாரமும், சந்தைப் பொருளாதாரமும் உருவாகும். தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மாதம்பையில் தகவல் தொழில்நுட்ப நகரமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிராமங்களில் நவீன விவசாயம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, இளையோருக்கு அதற்கு அவசியமான பயிற்சி பெற்றுக் கொடுக்கப்படும். அதேபோல் மீன்பிடித்துறை வளர்ச்சியை மையப்படுத்தி இப்பகுதியில் புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டும். 1977 ஆம் ஆண்டு கம்பஹாவிற்கு புதிய பொருளாதாரத்தை வழங்கினோம். இப்போது இப்பகுதியிலும் அதற்குரிய திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். அதனால் சிலாபம் – குளியாபிட்டிய வரையான பகுதியில் பெரும் அபிவிருத்தி ஏற்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். பொருளாதார மாற்றத்தின் ஊடாக, நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்திருக்கிறோம். அதனால் அரசியல் சாராமல் அதற்கு சகலரும் ஆதரவளிக்க வேண்டும். வழக்கமான அரசியலை இந்த நேரத்தில் செய்ய முடியாது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தக் கொள்கைகளை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

தொழில்நுட்பப் பாடத்துக்கான ஆய்வகத்தை பெற்றுகொடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி அடுத்த வாரத்திற்குள் கிடைக்குமென இப்பாடசாலை அதிபருக்கு உறுதியளித்தேன். தொழில்நுட்ப ஆய்வகங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த கேள்வி உள்ளது. இருப்பினும், நாத்தாண்டிய தம்மிசர வித்தியாலயத்தில் அதற்கான நடைமுறைப் பரீட்சைகளை மேற்கொள்ள முடியும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதற்காக ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். முழு மாகாணத்தினதும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நாம் எதிர்பார்க்கிறோம்.

300 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் இன்றளவில் 3000 மாணவர்கள் உள்ளனர். கல்வியற் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவனம் என்பவற்றை தோற்றுவித்த தற்போதைய ஜனாதிபதி, கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் கல்விக்காக அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார். புதிய கல்வி முறையில் கீழ் எந்தவொரு மாணவரையும் சாதாரண தரம் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்காமல், மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

கரும்பலகைக்கு மாறாக டிஜிட்டல் திரைகளை வழங்குவது நவீன கல்வி முறையாக அமையாது. அதற்கு அப்பாலான வேலைத்திட்டம் எம்மிடத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக ஆசியிரியர்களை பயிற்றுவிக்கத் தற்போதே ஆரம்பித்திருக்கிறோம். தேசிய பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலும் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்விக்கான தனியானதொரு பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படும். அதனால் கல்வியை சர்வதேச மயப்படுத்த முடியும்.

உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த,

புத்தளத்தின் ஒரேயொரு பௌத்த பாடசாலையான பாலிகா தேசிய கல்லூரிக்கு பற்றாக்குறையாக காணப்பட்ட கட்டடத்தை நிர்மாணித்துக் தந்தமைக்காக நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த பாடசாலைக்கு உதவ முடிந்துள்ளது.

நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டபோது அதிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தப்பியோடவில்லை. அவநம்பிக்கையுடன் இருந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காக புத்தளம் மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அன்று கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானங்கள் இன்றும் நாட்டின் கல்வியை பலப்படுத்த சாதகமான காரணமாக மாறியுள்ளது. அதனால் தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தொடர்ச்சியாகக் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வேலைத்திட்டத்தை கைவிட்டால் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ள நேரிடும்.