பாகிஸ்தானில் மீண்டும் இந்து கோயில்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த 64 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்து கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப, 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிடும் கூட்டாட்சி அமைப்பான எவாக்யூ டிரஸ்ட் சொத்து சபை இந்த ஒதுக்கீட்டை செய்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ராவி நதியின் மேற்குக் கரை நகரமான நரோவால் நகரத்தில் உள்ள பாவோலி சாஹிப் கோயில் 1960 இல் செயலிழந்தது.
இதனையடுத்து, இதுவரைக்கும் நரோவல் மாவட்டத்தில் இந்துக் கோயில் ஒன்று செயற்படவில்லை. இதனால் இந்து சமூகம் தங்கள் மதச் சடங்குகளை வீட்டில் அல்லது சியால்கோட் மற்றும் லாகூரில் உள்ள கோயில்களுக்குச் சென்றே மேற்கொண்டு வருகின்றது.
நரோவலில் 1,453க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தினர் வாழ்கின்றனர். அங்கு 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் 45 கோயில்கள் இருந்தன. எனினும், அவை காலப்போக்கில் பாழடைந்து விட்டன.
இந்நிலையிலேயே, பாழடைந்த கோயில் ஒன்றை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு முயற்சியில் உயர்நீதிமன்றில் தனியாள் ஆணைக்குழுவின் தலைவர் சோயிப் சித்தால் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் மன்சூர் மசிஹ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இதற்கிடையில் பாவோலி சாஹிப் கோயிலை மீட்டெடுப்பது இந்து சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் என்று தர்மஸ்தான குழுவின் தலைவர் சவான் சந்த் கூறியுள்ளார்.