நாமக்கல் என்கவுன்டர் சம்பவம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர். |
கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அச்சமயத்தில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளை கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளட்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குமாரபாளையத்தில் என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தில் நீல நிறத்தில் கொள்ளையர்கள் தூக்கிக்கொண்டு ஓடிய பேக்கில் இருந்து சிதறிய 500 ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. நோட்டுகள் அந்த இடத்திலேயே அப்படியே கிடக்கிறது. அவை காற்றில் பறக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் ரூபாய் நோட்டின் மீது கற்களை வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சோதனையில் இறங்கி தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட கண்டெய்னரில் இருந்து மொத்தமாக 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |