உலக புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சிகள் அழிவின் விளிம்பில்..

22.07.2022 12:52:29

வலசை செல்லும் மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகள் தற்போது அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக வகைபடுத்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ண சிறகுடன், கான்போரை கவர்ந்திழுக்கும் இவைதான் மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகள். மோனார்க் என்பதற்கு ஆளும் அரசன் என்பதாகும். இப்படி பெருமையோடு இவை அழைக்கப்பட காரணம் என்னவென்றால், இதுதான் வலசை செல்லும் வண்ணத்துப்பூச்சி இனமாகும். சின்னஞ்சிறு சிறகுகளை கொண்டு கடல் தாண்டி 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கக்கூடியது என்றால், அது அதிசயம் தானே... ஆம். ஒவ்வொரு ஆண்டும் குளிரில் இருந்து தப்பிக்க அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து தென்மேற்கு மெக்சிகோ நோக்கி இவை படையெடுக்கும்.

இந்த பட்டாம்பூச்சிகளின் வலசை பயணம் அற்புதமானதும், உலக அதிசயமும் கூட. அப்போதெல்லாம் மரங்களில் பூக்களை போல கொத்துக்கொத்தாய் தொங்கும் வண்ணத்துப்பூச்சிகளை காண பொதுமக்களும் படையெடுப்பார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் இந்த அழகான வலசை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1990 ஆம் ஆண்டின் காலகட்டத்தை ஒப்பிடுகையில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிட்டது.

ஏற்கெனவே மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு குறைந்துவருவதாக எச்சரித்துள்ள நிலையில், இப்போது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழிவின் விளிம்பில் இருக்கும் இனம் என வகைப்படுத்தி இருக்கிறது. இதற்கு செடிகள் மற்றும் மரங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், காடுகள் அழிப்பு, மனிதர்களின் தலையீடுகள் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையின் படைப்பில் அதிசமாக பார்க்கப்படும் இந்த வண்ணத்துப்பூச்சிகளை காக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.