ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ

10.01.2022 08:08:12

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஸ்பஜார் என்ற முகாமில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் தீக்கிரையாகின. தீ விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முகாமில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்தும் ஏற்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டிலும் பல முறை அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.