உருமாறி பரவிய இங்கிலாந்து வைரசால் அதிக தொற்று இல்லை

30.03.2021 09:27:53

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் இங்கிலாந்து வைரசை கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவியது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்தியாவிலும் இதன் தொற்று பல இடங்களிலும் காணப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதற்கும் இங்கிலாந்து வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா ஆகிய 3 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் இந்தியாவில் பரவி இருந்தன. இவை 771 பேரை தொற்றி இருந்தது.

அதில் இங்கிலாந்து வைரஸ்தான் அதிகளவில் காணப்பட்டது. இந்த வைரஸ் மட்டுமே 736 பேரை தாக்கி இருந்தது. இதன் தொற்று தன்மை எப்படி இருக்கிறது என்பது குறித்து புனேவில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிரியன் காம்ஸ்டர் எனப்படும் எலி மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. சில எலிகளுக்கு இங்கிலாந்து வைரஸ் செலுத்தப்பட்டது. அதே போல மற்ற சில எலிகளுக்கு இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டது.

இந்த ஆய்வு முடிவில் இங்கிலாந்து வைரசுடைய தொற்று குறைவாகவே இருந்தது. எனவே இங்கிலாந்து வைரசின் தொற்றும் தன்மை குறைவாகவே இருக்கிறது. இதனால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் இங்கிலாந்து வைரசை கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளது.