4,000 அமெரிக்கர்களை ஏமாற்றிய இந்தியருக்கு சிறை

18.09.2021 14:57:53

அமெரிக்காவில் 4,000க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த ஷேஸாத்கான் பதான்,40, என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாவட்ட நீதிமன்ற அட்டர்னி ராஜ் பாரேக் தீர்ப்பில் தெரிவித்து உள்ளதாவது:
ஷேஸாத்கான் பதானும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு வழிமுறைகளில் 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளனர். தேசிய புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ., போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.இ.ஏ., மற்றும் பிற அரசுத் துறைகளின் அதிகாரிகளைப் போல் அவர்கள் நடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி, ஏராளமான தொகையைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.


அதுமட்டுமன்றி, கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றி ஏராளமானவர்களிடம் ஷேஸாத்கான் பதான் தலைமையிலான கும்பல் பணம் பறித்துள்ளது. அந்தக் கும்பலிடம் சிக்கியவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்தான். அவர்கள் தங்கள் சேமிப்பை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த பல கோடி டாலர் மதிப்பிலான மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டமைக்காக ஷேஸாத்கானுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.