முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது!

15.03.2024 15:00:31

”முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்மானம்” என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பெசில் ராஜபக்ஷ முதலில் பொதுத்தேர்தலையே நடத்தவேண்டும் என நேற்று கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்மானம் மக்கள் விடுதலை முன்னணிக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையில் பகிரப்படும்.

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தினால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரமுறை நடைமுறையில் வைத்திருப்பதே எனது தனிப்பட்ட ரீதியிலான விருப்பமாகும்.
ஆனால் தேர்தல் ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகார முறையில் மாற்றம் அவசியம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகார முறைமை குறித்து பெரிதும் நம்பிக்கைகொண்டிருக்கவில்லை” இவ்வாறு தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.