சபரிமலை விவகாரம்.

17.08.2025 11:30:18

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தனது நன்றியை தெரிவித்துள்ளார்

நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று தரிசித்து வருகின்றனர்.தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்ற யாத்திரை தலமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.

அதற்கமைய, சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற யாத்திரையை, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தல யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அதற்கான வசதிகளை வழங்கவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்ச்சியாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு கிடைத்த மதிப்பாகவே இதை நாம் கருதுகிறோம் என  எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  புதிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காக  புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி. பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதே நேரம்  இதற்காக பாடுபட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து ஐயப்பன் சாமிமார்கள் மற்றும் பக்தர்களுக்கும்   இதன் போது  நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்  என எஸ்.ஆனந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத இந்த தருணத்தில் இந்து பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான சபரிமலை யாத்திரியை புனித யாத்திரியையாக பிரகனப்படுத்தி அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது, தற்போதைய அரசாங்கம் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காக மக்கள் ஆட்சி என்பதை நிரூபித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதோடு, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் பேசி பேசியே காலத்தை வீணடித்து  சென்ற நிலையில் ஆக்கபூர்வமாக செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும்   ஆனந்தகுமார் நன்றி பாராட்டினார்.