தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைந்து போரிட வேண்டும்: ஜோ பைடன்

11.08.2021 15:06:55

'தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போரிட வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 65 சதவிகித நிலபரப்பை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். நேற்று மாலை, ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை தலிபான்கள் கைப்பற்றினர். இப்படி கடந்த ஒரே வாரத்தில், ஏழு தலைநகர்களை கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வருகின்றனர்.


இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கன் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும். ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். தலிபான்களை விட ஆப்கன் படைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, போரிடவே அவர்கள் விரும்புவார்கள். அவர்களுக்காகவும் அவர்களின் நாட்டுக்காகவும் தொடர்ந்து போரிட வேண்டும்' என்றார்.