தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்
இயக்குனர் ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது லைகா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ், நெல்சன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன் “பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் பிடிக்கும். எக்கச்சக்க சோதனைகளை கடந்து இங்கு வந்து நிற்பதில் மகிழ்ச்சி. இந்தியன் படம் மொத்தம் 3 பாகங்கள். நான் இதுபோன்ற பல பாக படம் ஒன்றை சிவாஜி கணேசனை நடிக்க வைத்து இயக்க ஆசைப்பட்டேன். நான் இந்தியன் படத்தில் நடித்தபோது அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க சொல்லி எனக்கு அறிவுறுத்தியவர் சிவாஜி ஐயாதான்” என கூறியுள்ளார்.
மேலும் “நான் ஒரு தமிழன். இந்தியன் என்பது எனது அடையாளம். இதில் பிரிவினை செய்து விளையாட நினைத்தால் அது இந்தியாவில் நடக்காது. தமிழனுக்கு எங்கே எப்போது அமைதி காக்க வேண்டும் என்பது தெரியும். தமிழன் ஏன் இந்தியாவிற்கு தலைமை தாங்க கூடாது என்பதே என் எண்ணம்” என்று பேசியுள்ளார்.