சுட்டிக்காட்டிய குஷ்பு...! மன்னிப்பு கேட்ட கனிமொழி...!

28.10.2022 15:48:09

அக்டோபர் 4ஆம் தேதி, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும், கட்சி உறுப்பினர்கள் கண்ணியத்துடனும், பொறுப்புடனும் குறிப்பாக உள்ளாட்சித் தலைவர்கள் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அவர்கள் தரப்பிலிருந்து தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஏதேனும் சம்பவங்கள் தமக்குத் தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவில் உள்ள குஷ்பு உள்பட நடிகைகளை தரக்குறைவான வகையில் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, "ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை 'கலைஞரை பின்பற்றுபவர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.