இந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்யும் ஷங்கர்.

19.03.2021 09:46:26

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். 

கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். 

இதனிடையே நடிகர் ரன்வீர் சிங்கும் இயக்குனர் ஷங்கரிடம் கதை கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த ‘அந்நியன்’ திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.