நிரூபிக்கத் தவறினால் ,பதவியிலிருந்து விலக வேண்டும்

19.12.2024 09:11:56

நான்ஏ.சி அறையில் தனியாக சட்டக் கல்லூரி பரீட்சையை எழுதியதை நிரூபிக்கத் தவறினால், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்

பாராளுமன்ற விவாதத்தின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் நாமல், தான் சட்டப் பரீட்சையைத் தனியறையில் எழுதியது நிரூபிக்கப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

சவாலுக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, “சரி,சரி” எனப் பதிலளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறான வேண்டுமென்றே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாதிக்கப்படுவது சட்டக் கல்லூரி மற்றும் முழு சட்டத்துறையும் தான். இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாம் தவிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

இதேவேளை, சட்டப் பட்டத்தின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய போது, ​​தம்முடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றவர்கள் யார் என்பதை எம்.பி. நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.