ஏழை நாடுகளுக்கு மிச்சதடுப்பூசி உலக சுகாதார அமைப்பு கண்டனம்

09.09.2021 10:34:02

'வளர்ந்த நாடுகளிடம் உள்ள தடுப்பூசி மிச்சங்களை கொண்டு ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளட்டும் என்ற மனப்பான்மை ஏற்புடையது அல்ல' என, உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மருந்து நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோசை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தி உள்ளது. கோவிட் தடுப்பூசி விநியோகத்தில், வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு, ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில், வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.



இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதனால், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.