கமலுக்கு இருந்த வருத்தம்.

15.12.2025 14:00:45

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்து வருபவர் நடிகர் கமல். ஒரு பன்முகக் கலைஞராக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் பயணித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து இன்று பல பேருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இன்றைய தலைமுறையினரின் ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது கமல்ஹாசன் தான். அவருடைய படங்கள் அவருடைய பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் அவைகள் தான் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக காட்டப்படுகிறது.

இதற்கு முன் சிவாஜியை சொல்வார்கள். சிவாஜிக்கு பிறகு நடிப்பு என்றால் அது கமல்தான் என பல பேர் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சினிமாவில் எத்தனையோ புதுப்புது விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் அடித்தளம் போட்டவராகவும் கமல் இருந்திருக்கிறார். இன்னமும் இருந்து வருகிறார். புதிய புதிய தகவல் தொழில்நுட்பங்களை பற்றி ஆராய்ந்து வருகிறார்.

அதை சினிமாவில் எப்படி செயல்படுத்தலாம் என்றும் யோசித்து வருகிறார். ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இருந்தாலும் அவருடைய ஒரே நோக்கம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இன்று ஒரு புதிய பிலிம் சிட்டியை ஐசரி கணேஷ் நிறுவி இருக்கிறார். அந்த புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொள்ள அந்த விழாவில் கமல் பேசிய சில விஷயங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

இந்த ஃபிலிம் சிட்டி கிட்டத்தட்ட 20 தளங்கள் கொண்டதாக இருப்பதாக கமல் கூறியுள்ளார். இதற்கு முன் அமெரிக்காவில் 17 தளங்கள் உள்ள பிலிம் சிட்டியை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆசியாவிலேயே மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் கமல். மேலும் பேன் இந்தியா திரைப்படங்கள் என்று சொல்கிறார்கள் .அந்த  திரைப்படத்திற்கு ஆரம்ப கட்டமே சென்னை தான். இங்கிருந்து தான் பல மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்டு வெவ்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கின்றன

மும்பையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அது அவர்கள் மொழியில் மட்டும் தான் உருவானதாக இருந்திருக்கும். ஆனால் இங்குதான் வேறு மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன என்றும் கமல் கூறினார். ஐசரி கணேஷின் இந்த ஒரு முயற்சி என்னை மிகவும் கவர்ந்தது. நான் இவ்வளவு சினிமா பேசுகிறேன். ஆனால் என்னால் இதை செய்ய முடியவில்லை .

சரி நம் துறையில் இருக்கும் யாரோ ஒருவராவது செய்கிறாரே என்று எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் இங்கு ஒரு வேலை செய்பவனாக வந்துவிட்டு போகிறேன். இன்னும் இரண்டு குத்து விளக்கு ஏற்றச் சொன்னால் கூட நான் ஏற்ற தயாராக இருக்கிறேன் என்று அந்த விழாவில் மிகவும் பெருமிதத்துடன் பேசி உள்ளார் கமல்.