50% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி அமெரிக்கா சாதனை

07.08.2021 15:13:10

 அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கோவிட் தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார் தெரிவித்து உள்ளதாவது:வயது வந்தோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு, கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சுணக்கம் கண்டது.


இருந்தும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும். இரண்டு தவணை மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16.5 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என, அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.