அமைச்சுப் பதவி ஏற்றுக் கொண்ட ஹரினின் இரட்டை வேசம் !

21.05.2022 09:13:58

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனுஷ நாயணயக்கார ஆகியோர் நேற்றைய தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் ஊடக சந்திப்பையும் ஹரின் பெர்ணாண்டோ நடத்தியிருந்தார்.

அதன் போது, அசை தலைவர் தோல்வியடைந்து விட்டார், அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய நீங்கள் எப்படி அரச தலைவரிடமிருந்து நியமனக் கடித்தை பெற்றுக்கொண்டீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளிக்கையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் நியமனக் கடிதத்தை பெற்ற போது அருவருப்பாக இருந்தது எனவும் நியமனக் கடித்தை பெற்றுக்கொண்ட போது, அவருடன் ஒரு வார்த்தையை கூட பேசவில்லை எனவும் முகத்தை பார்க்காது நியமனக் கடித்தை பெற்றுக்கொண்டதாகவும் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட நிகழ்வு தொடர்பான புகைப்படம் எதுவுமில்லை எனவும் அரச தலைவர் மீது இருந்த அருவருப்பே இதற்கு காரணம் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அருவருப்பு என்பதற்காக நாடு வீழ்ச்சியடைந்து போவதை வேடிக்கை பார்ப்பது அதனை விட மோசமானது என்பதால், ஆசை ஆனால் அச்சம் என்று கூறிக்கொண்டிருக்காமல், நாட்டுக்காக முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டமை சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுடன் அவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முகத்தை பார்த்தவாறு புன்னகையுடன் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

 கொழும்பில் நேற்று நடந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.