முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - அனைவரையும் பங்கேற்க அழைப்பு.

17.05.2022 08:59:33

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.

அனைவரும் பேதங்களைத்துறந்து, சுயலாப, சுய விளம்பரப்படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்." என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் கோரியுள்ளனர்.

அத்துடன் அன்று மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பை நினைவுகூருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "2009ஆம் ஆண்டு இதே தினங்களில் ஈழத்தமிழினத்தை துடிக்கத் துடிக்க, துடைத்தழித்து ஒரு இன அழிப்பை ஸ்ரீலங்கா அரசு கொடூரமாக மேற்கொண்டது. இன விடுதலைக்காக போரிட்ட தமிழினத்தை ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதம் உலகினால் மனிதகுலத்துக்கு எதிராகப் பயன்படுத்த முடியாதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் போர்முறைகளையும் கொண்டு கொன்றொழித்து தமிழின அழிப்பொன்றை அரங்கேற்றியதை உலக வல்லாதிக்க தேசங்களும் வெறுமனே பார்த்து நின்றதுடன் மறைமுகமாக ஆதரவையும் வழங்கின.

பாதுகாப்பு வலயங்கள் என்று அரசால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும் காயமடைந்து மருத்துவமனைகளில் தஞ்சமடைந்த மக்களையும் ஷெல் வீசியும் கொத்துக்குண்டுகளை வீசியும் இனவெறி இராணுவம் கொன்றொழித்தபோது ஐ.நா. சபையும் ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இம்மண்ணில் தங்கள் பிரசன்னத்தை வெறுமைப்படுத்திக் கொண்டன.

போதிய உணவனுப்பாது, காயமடைந்தவர்களுக்கு மருந்தனுப்பாது மிகக்குரூரத்தனமாக தமிழின அழிப்பை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டபோது இந்த ஜனநாயக உலகம் வெறுமனே பார்த்து நின்றது" - என்று நினைவேந்தலுக்கான அறிக்கையில் முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.