ஐ.நா. தளங்கள் மீது கொங்கோவில் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் !

29.07.2022 09:31:27

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கே உள்ள பெனியில் ஐ.நா.வுக்கு எதிரான மோசமான போராட்டங்களுக்கு மத்தியில், ஐ.நா. தளம் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல்களால், குறைந்தது இரண்டு அமைதி காக்கும் தளங்களும் குறிவைக்கப்பட்டன. எனினும், உயிரிழப்பு புள்ளிவிபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐநா எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து நடந்த வன்முறை மோதல்களில், மூன்று ஐநா அமைதி காக்கும் படையினர் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கில் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ஐ.நா பொதுமக்களை பாதுகாக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கிராம மக்களைப் பாதுகாப்பதற்காக மேம்போக்காக உருவாக்கப்பட்ட மை மை போராளிக் குழுக்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளனர்’ என கூறினார்.

இஸ்லாமிய அரசு குழுவுடன் இணைந்த நேச ஜனநாயக முன்னணி உட்பட 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆயுதக் குழுக்கள் கிழக்கில் இயங்குகின்றன.

சமீபத்திய தாக்குதல்களின் அலை நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களை இடம்பெயர வழிவகுத்துள்ளது.