ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை!
|
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 28 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்க செய்தனர். |
|
இதனிடையே, இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து அப்போதிய திமுக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என திமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தவெக தலைமையிலான தமிழக அரசு வாபஸ் பெற்றது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 5 பேர் சேர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மனுதாக்கல் செய்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் மறு உத்தரவு பிறக்கும் வரைக்கும் தினந்தோறும் 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான வழக்கு இன்று (23-09-26) உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது சிபிஐ தரப்பில், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முடிப்பதற்கு மூன்று மாதம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தர வேண்டும். சிபிஐ அளிக்கும் நிலை அறிக்கை மீது அனைத்து தரப்பும் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். |