பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்கும் சீனா!

21.06.2025 09:35:38

சீனாவில் தயாரிக்கப்பட்ட J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை பாகிஸ்தான் விரைவில் பெற்றுக் கொள்ளவுள்ளது. முதற்கட்டமாக 40 விமானங்களை சீனா வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தான் விமானப்படையை ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவைக்கிறது.

இந்தியா தற்போது எந்த ஸ்டெல்த் போர் விமானத்தையும் பயன்படுத்தவில்லை. ரபேல் மற்றும் Su-30 MKI போர் விமானங்களுடன் இந்தியா மேலாதிக்கம் பெற்றிருந்தாலும், J-35 போர் விமானங்கள் வந்தவுடன் அந்த வலிமை சமனாகும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

J-35-ன் அம்சங்கள்:

J-35A எனப்படும் இந்த விமானம் இரட்டை என்ஜின், சப்பர் சோனிக் வேகம், ரேடாரில் தெரியும் சாத்தியம் மிகக் குறைவு (Radar Cross Section: 0.001 sqm), மற்றும் மற்ற ஆயுதங்களுடன் இணைந்து குறி பகிரும் திறன் கொண்டது. இது F-35 போல் காணப்படுகிறது.

இந்தியாவின் AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டம் தான் ஒரே விடை. ஆனால் அது 2035-க்குப் பிறகே பணிக்கு வரும். அதுவரை, இந்தியா தனது ரேடார் மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஸ்டெல்த் சக்தியில் முன்னேறும் நிலையில், இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.