இந்திய மாணவர்களை மீட்க மாற்று ஏற்பாடு
உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உயர்படிப்புகள் படித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதை தொடர்ந்து அவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக நேற்று ஒரு விமானம் உக்ரைன் புறப்பட்டது. ஆனால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டதால் அந்த விமானம் மீண்டும் இந்தியா திரும்பி விட்டது.
இதையடுத்து உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை வளைகுடா நாடான கத்தார் வழியாக அழைத்து வரலாமா? என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை இணை மந்திரி முரளீதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உக்ரைனில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு இருக்கும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.