“யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம்”
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். |
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது. அதனை தொடர்ந்து தமிழக ஆளுநரும், தனது விளக்கத்தை அளித்திருந்தார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று கூறினார். இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்! சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். |