தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு.

14.09.2025 10:44:36

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத் தேவையில்லை என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் நடாளுமன்றத்தில் எனக்கு ஜனாதிபதியை சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.

அந்த சந்திப்பின்போது நடந்த சில விடயங்கள், ஒரு சில ஊடக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் மூலம் கேட்டு அறிந்து சிலர் செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.

உண்மையில் இது தொடர்பாக வெளியிடுவதற்கு எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான் இருக்கவில்லை.

ஏன் என்றால் அது ஒரு உத்தியோகபூர்வமான சந்திப்பு இல்லை என்றார்.

அத்துடன், ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தாகவும் கூறினார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக எல்லை நிர்ணயம் மற்றும் விகிதாசார முறை குறித்து அரசாங்கத்தில் குழப்பம் இருப்பதாகவும், ஜனாதிபதி இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அபிவிருத்தி நிதியம் உருவாக்குவது குறித்து முன்னர் பேசப்பட்ட போதிலும் முன்னேற்றம் இல்லை எனவும், மாவட்டத்தில் நிலவும் நிர்வாக மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்தை மக்கள் நலன் சார்ந்ததாக கருதி ஆதரிக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சாணக்கியன், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழு இதற்கு வாக்களிக்காதது தவறான முடிவு எனவும், இதற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டமூலங்களுக்கு கட்சி ஆதரவு வழங்க வேண்டும் எனவும், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் விடயங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.