மன உளைச்சல் அதிகமாக உள்ளதா.. இலகுவில் விடுபட ..

17.09.2022 10:48:02

மன அழுத்தம்

வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டுமெனில், கடின உழைப்பு வேண்டும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களைவிட நாம் மேலோங்கி இருக்க வேண்டும். இந்தப் பயணத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். தோல்வி அடையும்போது துவண்டு விடாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே போதும், நாம் சறுக்காமல் நிமிர்ந்து விடுவோம்.

அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதே நம்மவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம். நமக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும், வெற்றியும், தோல்வியும் பற்றி மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளே பாதிப்பை ஏற்படுத்தும். நம்மைப்பற்றி நமக்கில்லாத அக்கறை இவ்வுலகில் எவருக்கும் கிடையாது என்பதை புரிந்து கொண்டாலே எம்மை சுற்றி எழும் தேவையற்ற ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விடுபட்டு கொள்ள முடியும்.

மன அழுத்தம் (stress), வெற்றியை நோக்கி பயணிக்க நிச்சயம் இருக்க வேண்டும். அது மிகாமல் இருக்க வேண்டும் என்பதே உண்மை

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள்

உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.

நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவதால் பதட்டமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கை முறையால் பொதுவாக இப்படி நேர்கிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலை, குடும்பம் மற்றும் தொழில் நெருக்கடிகளும் மன அழுத்தத்தை உண்டாக்குவதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றது.

அதிக வேலையால் ஏற்படும் மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும்போது இது நிகழ்கிறது. பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்.

மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும்.

 • பதட்டம்
 • எரிச்சல்
 • மனம் ஒருமுகப்படுத்த முடியாதது
 • அதிகக் களைப்படைவது
 • தூக்கமின்மை
 • வாய் உலர்ந்துவிடுவது
 • மூச்சுவிடுவதில் சிரமம்
 • அஜீரணக் கோளாறு
 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
 • உள்ளங்கை வேர்ப்பது
 • இருதயம் வேகமாகத் துடிப்பது
 • உடல் தசைகள் இறுகுவது

மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?

மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது.

இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன. இவை நம் உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.

மன அழுத்தத்தின் சில விளைவுகள்

கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது.

தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். ஆஸ்த்துமா பாதிப்பைத் தீவிரமாக்கும். புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், அளவுக்கதிகமாக உண்ணுதல் போன்ற நடத்தைகளைத் தூண்டிவிடுவதிலும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

இலகுவில் தவிர்த்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டியவை 

 • நல்ல இசை கேட்பது உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது, உங்கள் மன நிலையை உடனே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.
 • நன்றாக உறங்குவது சாதாரணமாக படுத்திருப்பது அல்ல, ஆழ்ந்து உறங்க வேண்டும்.
 • இடமாற்றம் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் இருந்துகொண்டு ஒரே சிந்தனையில் இராமல், சிறிது நாட்களுக்கு வெளியே புது இடங்களுக்கு செல்வது, வார இறுதியில் அருகில் இருக்கும் இடத்திற்குச் சென்று வருவது போன்ற இட மாற்றம் உங்கள் மன நிலையை மாற்றும்.
 • பிடித்தவர்களுடன் உரையாடுவது வெளியில் செல்ல தகுந்த நேரமோ, சமயமோ அமையவில்லை என்றால், உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள்.
 • பிடித்ததை சாப்பிடுவது உங்களுக்கு சமைப்பது பிடிக்குமெனில், புதிதாக ஒன்று செய்துபாருங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்து நன்றாக சாப்பிடுங்கள். அதுவும் கூட உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களை தோன்ற உதவியாக இருக்கும்.
 • விளையாடுவது சிலருக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். உங்களால் இயன்றவரை வியர்வை வெளிவர உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். சிலருக்கு செஸ் போன்ற விளையாட்டுகள் தலைவலியை ஏற்படுத்தும். மூளைக்கு மேலும் அழுத்தம் தரும் விளையாட்டுகளை சிறிது காலம் தவிர்த்து(rid), உங்களுக்கு உற்ச்சாகமூட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.
 • சினிமா பார்ப்பது சிலருக்கு சினிமா, நாடகம், நடனம், இசை போன்றவை நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அது அளவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • உடற்பயிற்சி தினமும் நல்ல உடற்பயிற்சி தேவை. காலையிலும், மாலையிலும் 40 நிமிடங்கள் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை(toxic) வெளியேற்ற உதவும். அப்படி செய்யாமல் இருந்தாலே, ஹார்மோனல் இம்பாலன்ஸ்(hormonal imbalance) ஏற்பட்டு, உடலுக்கு நோய்களை வரவழைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.
 •  சிரித்த முகம் சிரித்த முகத்துடன் இருந்து பாருங்கள். அனைத்தும் மாறிவிடும். உங்கள் முகத்தைப்பார்த்தாலே உங்களை எதிர்கொள்பவர் நேர்மறையான எண்ணத்தோடு உங்களை அணுகுவார். வெறும் சிரிப்பே சூழ்நிலையை மாற்றி, அனைத்தையும் எளிதாக பார்க்கும் மனநிலைக்கு உங்களை தள்ளும்.
 • தியானம் படபடப்பாக(restlessness) உணர்ந்தால், சிறிது நேரம் தியானம் செய்வது மிகவும் நல்லது. பரீட்சைக்கு முன் அனைவர்க்கும் வயிற்றில் பட்டாம்பூச்சி அடித்துக்கொள்ளும். சிறிது நேரம் நிதானமாக கண்களைமூடி தியானம் செய்து பாருங்கள், மனம் அமைதி கொள்ளும்.