
அதிபர் தெரிவில் கூட்டமைப்பின் ஆதரவு
இலங்கையில் சர்வகட்சி ஆட்சி
இலங்கையில் சர்வகட்சி ஆட்சியை அமைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் வெளியிட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகையிலிருந்து விடுபட்டு உண்மைத் தன்மையுடன் செயற்படும் வகையில் சர்வகட்சி அரசு அமையும் பட்சத்திலேயே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அதிபர் தெரிவில் கூட்டமைப்பின் ஆதரவு
“ ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களின் நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துபவர். ராஜபக்சர்களின் ஆட்சியின் நீட்சியாகத் தான் அதனைப் பார்க்க முடியும்.
அதனை தடுப்பதாக இருந்தால் டளஸ் அழகப்பெருமவுக்கு தான் வாக்களிக்க முடியும். மாற்று தெரிவு எதுவும் எமக்கு இருக்கவில்லை.
தற்போது இலங்கைக்கு நிதி வழங்குவதலில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள் எழ வாய்ப்பே இல்லை.
ஆர்ப்பாட்டகாரர்களை வேட்டையாடுவது மோசமான செயல்
ஆர்ப்பாட்டத்தின் மூலமே ரணில் விக்ரமசிங்க அதிபரானார். ஆர்ப்பாட்டம் நடந்திருக்காவிட்டால் இன்று நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் ஒரு தனி எம்.பியாக அமர்திருப்பார்.
அந்த ஆர்ப்பாட்டத்தை உபயோகித்து அதிபராகிவிட்டு அந்த ஆர்ப்பாட்டகாரர்களை வேட்டையாடுவது மிகவும் மோசமான செயல்.
இவருக்கு முன்னுக்கு இருந்த கோட்டாபய ராஜபக்ச கூட செய்யாததை, தான் செய்து ஒரு பலசாலியாக தன்னை காட்ட முயல்கிறார். அமைதியான போராட்டக்காரர்களை விரட்டி விரட்டி கைது செய்வது மிகவும் தவறான செயற்பாடு. அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். சர்வதேசமும் குரல் கொடுக்கும்.
இவ்வாறான செயற்பாடு தொடருமாக இருந்தால் நாட்டுக்கு நிதி வருவதை மறந்து விட வேண்டும்” என்றார்.