ஆப்கன் பெண் எம்.பி திருப்பி அனுப்பப்பட்டதால் சலசலப்பு

27.08.2021 12:36:13

டில்லி வந்த ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.,யை, வந்த விமானத்திலேயே மீண்டும் துருக்கிக்கு அனுப்பிவைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து உயிருக்கு அஞ்சி மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தை சேர்ந்த ரங்கினா கர்கார் என்ற பெண் எம்.பி., துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து கடந்த 20ம் தேதி இந்தியாவுக்கு விமானத்தில் வந்துள்ளார்.தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அங்கிருந்த அதிகாரிகள் அவரை வெளியே செல்ல அனுமதிக்காமல் மீண்டும் வந்த விமானத்திலேயே துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ரங்கினா கர்கார் கூறியதாவது:

மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற 20ம் தேதி டில்லி சென்றடைந்தேன். 22ம் தேதி இஸ்தான்புல் திரும்புவதற்கும் டிக்கெட் வாங்கி இருந்தேன்.எனினும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்ததும், என்னிடம் இருந்த பாஸ்போர்ட்டை அங்கிருந்த அதிகாரிகள் பெற்றுவிட்டனர். என்னை ஒரு குற்றவாளியை நடத்துவதுபோல் நடத்தினர். பின், வந்த விமானத்திலேயே என்னை ஏற்றி அனுப்பினர்.துபாய் வழியாக மீண்டும் துருக்கிக்கு நாடு கடத்திவிட்டனர். துபாயிலும் என்னிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை. இஸ்தான்புல் வந்திறங்கியதும் தான் என்னிடம் அதை தந்தனர். மகாத்மா காந்தியின் இந்தியாவில் இப்படி நடக்கும் என நான் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.