மக்கள் நன்றியை மறக்க மாட்டார்கள்

24.07.2024 07:52:51

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நாடு ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கீழ்
இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் மீட்கப்பட்டுள்ளது.

உலகில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகள் இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டவில்லை.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்தும்
மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் எழுந்தன.

 

ஆனால், அந்த முடிவுகளின் நன்மைகளை மக்கள் பெறும்போது, அந்த எதிர்ப்பு மறைந்துவிடும்.

உலகில் உள்ள ஏனைய நாடுகள் நம் நாட்டை விட அதிக சதவீத வரிகளை வசூலிக்கின்றன
பொருளாதார நெருக்கடியின் போது, மக்களிடம் பணம் இருந்தது.

ஆனால் வாங்குவதற்கு நாட்டில் பொருட்கள் இல்லை. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம்.

மேலும் கட்சி பேதமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மக்களும் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக அடுத்த தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார்.

நமது நாட்டு மக்கள் செய்நன்றியை மறக்க மாட்டார்கள் எனஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தொிவித்தாா்.