'அனுமனை போல இந்திய நிறுவனங்களுக்கு அவற்றின் பலம் தெரியவில்லையா?'

14.09.2022 10:39:00

'அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் அதிக நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய தொழில் துறையினர் மட்டும் முதலீடு செய்ய தயங்குவது ஏன்?'' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

'மைண்டுமைன்' மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவை, தற்போது முதலீட்டுக்கு ஏற்ற நாடாக கருதுகின்றன. அன்னிய நேரடி முதலீடு, அன்னிய முதலீடு ஆகியவை அதிகரிப்பதன் வாயிலாக இதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன என்பது தான் தெரியவில்லை. அவை அனுமனை போல உள்ளனவா? அனுமனின் பலம் அவருக்குத் தெரியாது என்பதைப் போல, இந்திய நிறுவனங்களின் பலம் அவற்றுக்குத் தெரியவில்லையா?

தங்களுடைய சொந்த பலத்தில், சொந்த திறமையில் அவற்றுக்கு நம்பிக்கை இல்லையா? அருகில் உள்ள யாரோ ஒருவர் அதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்தான் செய்ய முடியுமா?அப்படி எடுத்து சொல்லப்போவது யார்? அது நிச்சயமாக அரசாக இருக்க முடியாது. இந்திய தொழில்துறையினர் முதலீடு செய்வதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். ஆனால், அவர்களிடம் நான் கேட்க விரும்புவது, உங்களை முதலீடு செய்யவிடாமல் தடுப்பது எது என்பதைத் தான்.

உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக, உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அத்துடன், வரி விகிதங்களையும் குறைத்துள்ளது. இது இந்தியாவுக்கான நேரம். நாம் இந்த தருணத்தை தவறவிட்டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.