உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் 8 பேர் கொலை!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 8 பேர் கொல்லப்பட்டமை தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிற்றுந்து ஒன்று மோதுவது, குறித்த காணொளியில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இதுவரையில் குறித்த காணொளி, இந்திய காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி, மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 45 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு தொடர்பிருப்பதாக இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ராவின் மகன் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமைச்சரின் புதல்வர் தமது வாகனத்தினை, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக செலுத்தியபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தமது மகன் குறித்த இடத்தில் இருக்கவில்லை என இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த காணொளி வெளியாகியுள்ளதோடு விபத்தை ஏற்படுத்திய வாகனத்திற்கு பின்னால் விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வாகனம் செல்வது தெரியவந்துள்ளது.