அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் சர்வதேச ரி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ், சர்வதேச ரி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் தான் விளையாட மாட்டேன் என உணர்ந்ததாகவும் இதுவே ஓய்வுப் பெற சரியான தருணம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற 36 வயதான ஆரோன் பின்ஞ், தற்போது 12 வருட ரி-20 கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில், சர்வதேச ரி-20 அறிமுகத்தை பெற்ற பின்ஞ், இறுதியாக கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் விளையாடியிருந்தார்.
இதுவரை அவுஸ்ரேலியா அணிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 19 அரைசதங்கள் 2 சதங்கள் அடங்களாக மூவாயிரத்து 120 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 34.28 ஆகும். ஸ்டிரைக் ரேட் 142.5 ஆகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிரான 172 ஓட்டங்கள் எடுத்ததே அவரது தனிநபர் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
குறித்த 2021ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய மண்ணில் நடைபெற்ற ரி-20 உலகக்கிண்ண தொடரில், ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.